×

பத்தாண்டுகால பிஜேபி ஆட்சியின் இருண்ட பக்கங்களை ஜனாதிபதி உரையில் சொல்லாமல் விட்டது ஏன்? மாநிலங்களவையில் டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு கேள்வி

டெல்லி: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி. டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு பேசியதாவது: ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போலவே, ஓர் அரசினுடைய செயல்பாடுகளிலும் நல்லது கெட்டது என இரண்டும் கலந்திருக்கும். ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான பி.ஜே.பி. அரசின் பத்தாண்டுகால சாதனைகளைப் பட்டியலிட்ட ஜனாதிபதி அவர்கள், இந்த அரசின் இன்னொரு பக்கத்தை பார்க்கத் தவறிவிட்டார். அவர் பார்க்கத் தவறிய அந்தப் பக்கம் இருட்டும் பயங்கரமும் நிறைந்தது. இங்கே அமர்ந்திருக்கும் அமைச்சர்களும் அந்தப் பக்கத்தை பார்க்க மறுக்கிறார்கள்.

தேர்தல் நெருங்கிவரும் இந்த நேரத்தில் வாசிக்கப்பட்ட ஜனாதிபதி உரை, பி.ஜே.பி.யின் தேர்தல் பிரச்சார உரையாகவே இருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் என்ற வார்த்தை ஜனாதிபதி உரையில் 32 முறை இடம்பெற்று, சில சாதனைகள் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால். அச்சமூட்டுகிற இன்னொரு பக்கத்தையும் நாடு தெரிந்துகொள்ள விரும்புகிறது.

ஜனாதிபதி உரை மூலமாக இந்த அரசு சொல்ல மறுக்கிற, மறைக்கிற சில விஷயங்களை இங்கே நான் பட்டியலிட விரும்புகிறேன். மணிப்பூரில் என்ன நடக்கிறது என்று இங்கே அமர்ந்திருக்கிற எம்.பி.க்கள் யாருக்காவது தெரியுமா? நமக்கே இந்த நிலை என்றால் சாதாரண பொது மக்களின் நிலை என்ன? மணிப்பூரில் என்ன நடந்தது? வன்முறை கட்டுக்குள் இருக்கிறதா? அமைதி திரும்ப என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பது பற்றி ஒரு வார்த்தைகூட ஜனாதிபதி உரையில் இல்லை.

கடந்த பத்தாண்டுகளில் 75 முறை பயணித்து 70 நாடுகளுக்கு சென்று வந்திருக்கிறார் பிரதமர் மோடி. ஆனால் இதே டெல்லியில் அவர் கண் முன்னால் பல மாதங்களாக நடந்த விவசாயிகள் போராட்டத்தை கவனிக்க அவருக்கு நேரமில்லை. இதுபற்றி ஜனாதிபதி ஏன் எதுவும் சொல்லவில்லை?

விவசாயிகள் தற்கொலை செய்வது போன்ற கொடுமையான நிகழ்வு வேறு எதுவும் இல்லை. கடந்த பத்தாண்டுகளில் சுமார் ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்திருக்கிறார்கள். விவசாயிகளுக்கு
ஏராளமாக கடனுதவி செய்திருக்கிறோம் என்று இந்த அரசு சொல்லிக்கொண்டு இக்கும்போதுதான் தினசரி 30 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கை சொல்கிறது.

நம் மண்ணின் மைந்தர்களான விவசாயிகளை இப்படிப்பட்ட அவல நிலையில் வைத்திருக்கும் ஒரு நாடு எப்படி வளர்ந்த, முன்னேறிய நாடாக இருக்க முடியும்? அடுத்த ஐந்தாண்டுகளுக்கு 81 கோடி பேருக்கு இலவசமாக உணவுப் பொருட்களை கொடுக்கப்போவதாக இந்த அரசு சொல்கிறது. இந்தளவுக்கு மாபெரும் அளவில் உணவுப்பொருட்களை கடும் வெயிலிலும் மழையிலும் பாடுபட்டு விளைவிக்கும் விவசாயிகளை இந்த நிலைக்கு ஓர் அரசு ஆளாக்கலாமா? இதுபற்றி இந்த உரையில் ஒரு வார்த்தை கூட இல்லையே?

2014ல் 5.4 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் இப்போது 10 சதவீதத்தைத் தாண்டிவிட்டது. குறிப்பாக 25 வயது முதல் 35 வயது வரையுள்ள இளைஞர்கள் விஷயத்தில் வேலைவாய்ப்பின்மை 30 சதவீதத்தைத் தொட்டுவிட்டது. 40 சதவிகிதம் இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். அடுத்த 30 சதவிகிதம் இளைஞர்கள் தகுதியான வேலை கிடைக்காமல் ஏதோ ஒரு வேலையைச் செய்கிறார்கள்.

குடும்ப வன்முறை, பாலியல் தொல்லை, கவுரவக் கொலை, ஆதாயக் கொலை, கொள்ளை, கடத்தல், கற்பழிப்பு என பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நம் நாட்டில் அதிகரித்தவண்ணம் உள்ளது. 2011ல் பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள் 2,28,650. 2021 ல் இது 4,28,278 ஆக உயந்துள்ளது. தினசரி 86 கற்பழிப்பு சம்பவங்கள் என்ற அளவில் 2021ல் 31677 கற்பழிப்பு சம்பவங்கள் நிகழ்ந்து வழக்குப் பதிவாகியுள்ளது. இதைக் கட்டுப்படுத்த, தடுக்க இந்த அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றி இந்த உரை எதுவுமே சொல்லவில்லை.

பட்டியலினத்தவர்களுக்கு எதிரான வன்முறை மற்றும் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. கடந்த பத்தாண்டுகளில் இந்த வகையில் 5 லட்சம் வழக்குகள் பதிவாகியுள்ளன. முந்தைய ஜனாதிபதியும் தற்போதைய ஜனாதிபதியும் அதே ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவர்கள் என்று நாம் பெருமைப்படும் நேரத்தில் இப்படிப்பட்ட குற்றங்கள் அதிகரிப்பது துரதிஷ்டவசமானது.

ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர் படும்பாடும் துயரங்கள் நிறைந்தது. இந்த உயர்கல்வி நிலையங்களில் கடந்த பத்தாண்டுகளில் எட்டாயிரம் பட்டியலின மாணவ மாணவிகள் தங்கள் படிப்பை பாதியில் விட்டிருக்கிறார்கள். இதுவரை 50 பேர் தற்கொலை செய்திருக்கிறார்கள்.

சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் கொல்லப்படுவதும் கவலை அளிக்கும் அளவுக்கு உள்ளது. கட்டப்பஞ்சாயத்து நடத்தி, சொந்தமாக விசாரனை நடத்தும் சட்டவிரோத குழுக்களை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தாமல் விட்டால், ஒட்டுமொத்த நாட்டையும் இந்தக் கலாச்சாரம் நாசப்படுத்திவிடும் என்று உச்ச நீதிமன்றமே எச்சரிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது. எதிர்கால சந்ததிகளைப் பாதிக்கும் அதிமுக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பிரச்னை பற்றி ஜனாதிபது உரையில் ஒரு வரிகூட இல்லை.

இன்னொருபுறம் சைபர் குற்றங்களும் அதிகரித்தபடி உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் இத்தகைய குற்றங்கள் பத்துமடங்கு அதிகரித்துள்ளது. அரசுக்குச் சொந்தமான இணையதளங்கள் கூட சர்வசாதாரணமாக விஷமிகளால் முடக்கப்படுகிறது. சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி குற்றங்கள் செய்வதும் அதிகரித்துவருகிறது. அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகளின் சமூக வலைதளப் பக்கங்களே முடக்கப்படும்போது, சாதாரண மக்களின் நிலை என்ன?

இந்தியப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவோம் என்று சொல்கிறீர்கள். ஆனால், பத்தாண்டுகளுக்கு முன்பு அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 53 ரூபாய இருந்தது. இப்போது 83 ரூபாயாக வீழ்ந்திருக்கிறது. கச்சா எண்ணெய், வெள்ளி, தாமிரம், வேதிப்பொருட்கள் என நாம் இறக்குமதி செய்யும் பொருட்களின் அளவும் அதிகரித்து வருகிறது. அப்படி இறக்குமதி செய்யும் ஒவ்வொரு டாலர் மதிப்புக்கும் 30 ரூபாய் கூடுதலாக செலவளிக்கிறோம் எனும்போது நமது பொருளாதார நிலை கவலை அளிக்கவே செய்கிறது.

ஒட்டுமொத்த அளவில் நம் நாடு இப்படி இருக்கும்போது தமிழ்நாடு எந்தளவுக்கு முன்னேறியிருக்கிறது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். புதிய கல்விக் கொள்கையின்படி தேசிய அளவில் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை விகிதத்தை 2035ம் ஆண்டுக்குள் 50 சதவிகிதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை 2020ம் ஆண்டுக்கு முன்பே தமிழ்நாடு எட்டிவிட்டது. திராவிட மாடலை எங்களுக்கு அளித்த தந்தை பெரியார்தான் இதற்கு மூலகாரணம். அவரால்தான் இது சாத்தியமானது. கல்வி மட்டுமல்ல, சுகாதாரம், அடிப்படை கட்டமைப்பு, தொழில் வளர்ச்சி என பல விஷயங்களில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது.

சமூக நீதி, சமதர்மம், சகோதரத்துவம் ஆகியவற்றைப் போதித்த பெரியாரின் வழியில் பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் கலைஞரும் நடைபோட்டார்கள். இப்போது தளபதி ஸ்டாலின் அவர்கள் அதே கொள்கைகளைப் பின்பற்றி, நாடுபோற்றும் திராவிட மாடல் ஆட்சியைத் தந்து தமிழக மக்களை வழிநடத்தி வருகிறார்.

எனது உரையை முடிக்கும் முன்பாக, 62 ஆண்டுகளுக்கு முன்பாக இதே அவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேரறிஞர் அண்ணா அவர்கள் பேசியதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ‘’இந்தியாவின் தென் பகுதில் புதிய தேசியவாதம் உருவாகி வருவதுபற்றி ஜனாதிபதி உரையில் எதுவும் இல்லை. நடைமுறையில் உள்ள மூன்று கோட்பாடுகளில் ஜனநாயகம் அழிக்கப்பட்டுவிட்டது, பொதுவுடைமைத் தத்துவம் நலிந்துவிட்டது; தேசியவாதம் தவறாக புரிந்துகொள்ளப்படுகிறது. ஆனால் வரும் ஆண்டுகளில் தென்னகத்து மக்களின் தேசியவாதம் பற்றிய புரிதலை ஏற்றுக்கொண்டு, அதன் தேவையை உணர்ந்து, சுய நிர்ணயத்தின் அவசியத்தை புரிந்துகொள்ளும் காலம் வரும் என்று நம்புகிறேன்” என்று சொன்னார் அண்ணா.

அவர் இப்படிப்பேசி 62 ஆண்டுகள் ஆனாலும், இப்போது நம்மைச் சுற்றி நடப்பதை கவனித்தால், இப்போதும் அந்த வார்த்தைகள் பொருத்தமானதாக இருப்பதை மறுக்க முடியாது.

The post பத்தாண்டுகால பிஜேபி ஆட்சியின் இருண்ட பக்கங்களை ஜனாதிபதி உரையில் சொல்லாமல் விட்டது ஏன்? மாநிலங்களவையில் டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு கேள்வி appeared first on Dinakaran.

Tags : BJP ,Rajya Sabha ,Dr. ,Kanimozhi N.V.N. Somu ,Delhi ,DMK ,President ,
× RELATED நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற...